மாணவியிடம் அத்துமீறிய பேராசிரியர் சஸ்பெண்ட்


நாகை அருகே கல்லூரி மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். காரைக்கால் அருகே உள்ள வரிச்சிக்குடி பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா(21)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.காம் படித்து வருகிறார். தற்போது செமஸ்டர் தேர்வுக்காக விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை(5ம் தேதி) கவுசல்யாவுக்கு போன் செய்த சக மாணவி ஒருவர், செவ்வாய் கிழமை(6ம் தேதி) சிறப்பு வகுப்பு இருப்பதாகவும், அவசியம் வருமாறும் கூறியுள்ளார்.

இதை நம்பி கவுசல்யா கடந்த 6ம் தேதி கல்லூரிக்கு சென்றுள்ளார். ஆனால் வகுப்பறையில் மாணவ, மாணவிகள் யாரும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த கவுசல்யா, வணிகவியல் துறைத் தலைவர் அறைக்கு சென்று, இன்று சிறப்பு வகுப்பு உண்டா எனக்கேட்டுள்ளார். அப்போது மாணவி கவுசல்யாவை சேரில் உட்காருமாறு கூறிய, துறைத் தலைவர் கணேசன் அவரிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கவுசல்யா, அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து வெளியே வந்து விட்டார்.

பின்னர் இதுபற்றி தனது பெற்றோரிடம் கவுசல்யா கூறியுள்ளார். பின்னர் நேற்று தனது பெற்றோருடன் கல்லூரிக்கு வந்த கவுசல்யா, நடந்த சம்பவம் குறித்து முதல்வர் ஜோனஸ் குணசேகரனிடம் புகார் செய்தார். பேராசிரியர் கணேசனை சஸ்பெண்ட் செய்துள்ளதாகவும், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்றும் முதல்வர் ஜோனஸ் குணசேகரன் தெரிவித்தார். மேலும் கவுசல்யாவிடம், சிறப்பு வகுப்பு உள்ளதாக கூறிய மாணவியிடம், அவர் ஏன் அப்படி கூறினார் என விசாரிக்கவும் கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"