சினிமா பாணியில் ரயிலில் கொள்ளை


ஓடும் ரயிலில் 40 திருடர்கள் ஏறி சாவகாசமாக 500 பயணிகளிடம் கொள்ளை அடிக்கும் காட்சி சினிமாவில் வந்ததில்லை. மேற்கு வங்காளத்தில் நடந்த நிஜ சம்பவம் இது.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள டாடா நகரில் புறப்பட்டு, மேற்கு வங்கம் வழியாக பீகாரில் உள்ள சப்ராவுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் அது. அதிகாலை 2 மணி. எல்லாரும் தூங்கும்போது ஒரு பயணி எழுந்து அபாய சங்கிலியை இழுக்கிறார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி அது. ரயில் நிற்கிறது. நாலைந்து ஜீப்புகள் வேகமாக வருகின்றன. முகமூடி அணிந்த ஆசாமிகள் 40 பேர் ஏழு பெட்டிகளில் தாவி ஏறுகின்றனர். பயணிகளை எழுப்பி துப்பாக்கியை காட்டி நகை, பணம், மொபைல் போன்களை சேகரிக்கின்றனர். தர மறுத்தவர்களுக்கு அடி. 40 நிமிடத்தில் வேலை முடிந்து, கொள்ளையர்கள் ஜீப் ஏறி டாட்டா காட்டுகின்றனர். ரயில் பயணத்தை தொடர்கிறது.

அடுத்த ஸ்டேஷனில் 12 பேர் இறங்கி ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். நடந்த எதுவும் தெரியாமல் குடிபோதையில் தூங்கிக் கொண்டிருந்த கார்டுக்கு தர்ம அடி விழுந்ததால் அவரும் படுக்கையில். ரயில் நின்றால், செயினை இழுத்தது யார், ஏன் என்று பார்க்க டிரைவரும் கார்டும் வருவது வழக்கம். டிரைவரை மிரட்டி தடுத்து வைத்திருந்ததால் அங்கிருந்து தகவல் அனுப்ப முடியாமல் போனதாக தென்கிழக்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

கஜானாவுக்கு பணம் கொண்டு செல்லும்போது, அரசகுமாரி உடல் நிறைய நகைகள் அணிந்து பயணிக்கும் போது, ராணுவத்துக்கு ஆயுதங்கள் எடுத்துச் செல்லும்போது ‘முகமூடி வீரர்கள்’ புரவிகளில் வந்து தாவியேறி கொள்ளை அடிப்பது பற்றி படித்திருக்கிறோம், திரையில் பார்த்திருக்கிறோம். கர்ண பரம்பரை கதையாகும் சுவாரசியம் இருந்தது அந்த சம்பவங்களில்.
ரிசர்வேஷன் இல்லாத இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்பவர்களிடம் கொள்ளையடிப்பது ‘கிரேட் டிரெய்ன் ராபரி’களின் நினைவுக்கும் கொள்ளைத் தொழிலுக்கும் அவமானம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"