பல மாதங்களாக 2 சிறுமிகளை பலாத்காரம் செய்த கொடியவர்கள் கைது


சேலத்தில் ஆதரவற்ற இரண்டு சிறுமிகளை அதே ஊரைச் சேர்ந்த இரண்டு பேர் தொடர்ந்து பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் சரண்யா, லாவண்யா ,(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இதில் ஒரு சிறுமியின் வயது 12 என்றும் மற்றொரு சிறுமியின் வயது 16 என்றும் தெரியவந்துள்ளது. தாய் தந்தையரின் ஆதரவை இழந்த, இந்த இரு சிறுமிகளும், தங்களது பாட்டியுடன் அம்மாபேட்டையில் வசித்து வந்துள்ளனர்.

பாட்டி இறந்துவிடவே தனித்துவிடப்பட்ட சிறுமிகள் இருவரும், சேலம் பேருந்து நிலைய பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த நாகசாமி என்பவர், தனது வீட்டில், வீட்டு வேலை செய்யுமாறும், தேவையான உதவிகளை செய்வதாகவும் கூறி அவர்கள் இருவரையும், அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு அவர்களை நாகசாமி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவருடன், அவரது உறவினரான சந்திரன் என்பவரும் இந்த தகாத செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இது குறித்த தகவல் அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் சிறுமிகளை காப்பாற்றியதோடு, காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து நாகசாமியையும், சந்திரனையும் சேலம் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். சிறுமிகள் இருவரும் காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"