சிறு தொழில் தொடங்க செய்ய வேண்டியவைகள்


பலர் படித்துவிட்டு சுயதொழில் தொடங்க ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்கு எந்தவித தொழிலை தேர்ந்து எடுக்க வேண்டும் என்பதில் ஒருவித குழப்ப நிலை இருக்கும்.அப்படிப்பட்டவர்களுக்கு மாவட்ட தொழில் மையம் சிறந்த வழிகாட்டியாக இருந்து தொழிலை தொடங்க உதவுகிறது. தொழில் தொடங்க ஆர்வமாக இருப்பவர்களுக்காக, U.Y.E.G.P. திட்டத்திலிருந்து சில ஆலோசனைகளை கேள்வி பதில் வடிவில் பார்ப்போம்.

லோடு ஆட்டோ வாங்க இந்த திட்டத்தில் கடன் கிடைக்குமா?
சிறு வாகன கடன் என்பது சேவைப்பிரிவைச் சார்ந்தது. இதில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட முதலீடு ரூ.3 இலட்சம். மீதமுள்ள தொகையை பயனாளிகள் சொந்த முதலீடாக செய்வதாக இருப்பின், இந்த திட்டத்தில் பயன்பெற அடிப்படையான நலிவுற்றோர் என்ற தகுதி இல்லாமல் போய்விடும். மேலும் வாகன கடன் கேட்டு விண்ணப்பிப்பதற்கு செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம், வில்லை ஆகியன அவசியம்.

U.Y.E.G.P. திட்டத்தில் கடன் பெற்றால் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படுமா?
கண்டிப்பாக வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

36 வயது உள்ள ஒருவர் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க முடியுமா?
பொதுப்பிரிவினராக இருந்தால், விண்ணப்பிக்கும் தினத்தில் 35 வயது பூர்த்தியாகி இருக்கக் கூடாது. சிறப்பு பிரிவினராக இருந்தால் 45 வயது பூர்த்தியாகி இருக்கக் கூடாது.

பட்டப்படிப்பில் அரியர்ஸ் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாமா?
இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க குறைந்தபட்ட கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே. ஆகையால் தயக்கமின்றி விண்ணப்பிக்கலாம்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வாரிசுகளுக்கு, முன்னாள் ராணுவத்தினருக்கான வயது வரம்பு சலுகை கிடைக்குமா?
முன்னாள் ராணுவத்தினருக்கு என வழங்கப்படும் வயது வரம்பு சலுகை முன்னாள் ராணுவத்தினருக்கு மட்டுமே பொருந்தும். அவர்களின் குடும்பத்திற்கோ, பாதுகாவலில் உள்ளவர்களுக்கோ பொருந்தாது.

பள்ளி மாற்றுச் சான்று பெறாதவர்கள் விண்ணப்பிக்க முடியுமா?
பள்ளித் தலைமை ஆசிரியரிடம் தொடர்பு கொண்டு, மாற்றுச் சான்றிதழை பெற்று வந்தால் விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி ஏற்றுக் கொள்ளப்படும்.

திட்ட அறிக்கை தயாரிக்க எவ்வளவு செலவாகும்?
விண்ணப்பதாரர்கள் உத்தேசித்துள்ள திட்டம் குறித்த உத்தேச வரவு-செலவு மற்றும் முதலீட்டு விபரங்களை நீங்களே தயாரிக்கலாம். மாவட்ட தொழில் மையங்களிலும், சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டு நிறுவனங்களிலும் கிடைக்கக் கூடிய மாதிரி திட்ட அறிக்கைகளை பார்வையிட்டும் திட்ட அறிக்கைகளை தயாரிக்கலாம்.

தொலைநிலைக் கல்வி (Distance Education) மூலம் படிப்பவர்களும் விண்ணப்பிக்க முடியுமா?
விண்ணப்பிக்க முடியும்.

பழைய இயந்திரங்களை கொள்முதல் செய்து விற்பனை செய்யும் தொழிலுக்கு கடன் கிடைக்குமா?
பழைய இயந்திரங்களை விலை நிர்ணயம் செய்து விற்பவர் மற்றும் வாங்குபவர் மட்டுமே தொடர்பானது. எனவே அந்த மதிப்பீடு அரசாங்கத்திலும், வங்கியிலும் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. மேலும் பழைய இயந்திரங்கள் தாம் முதலில் நிறுவப்பட்ட இடத்தில் ஏற்கனவே வேலைவாய்ப்பு உருவாக்குதல் என்ற கடமையை செய்து முடித்துவிட்டதாக கருதப்படுகிறது. எனவே பழைய இயந்திரங்கள் கொள்முதலுக்கு கடன் கிடையாது.

பேப்பர் கப் தயாரிக்கும் தொழிலுக்கு, கூடுதல் இயந்திரம் வாங்க இந்த திட்டத்தில் கடன் கிடைக்குமா?
U.Y.G.E.P. திட்டம் புதிய தொழில்களுக்கு மட்டுமே. எனவே இதில் விரிவாக்கத்திற்கு கடனுதவி கிடையாது. நீங்கள் உங்கள் சேவைப்பகுதிக்கான வங்கி மேலாளரை அணுகி சிறு தொழிலுக்கான கடனுதவியை கேட்டு பெற்றபின், மாவட்ட தொழில் மையத்தை அணுகி விரிவாக்கத்துக்கான மானியத்தை பெற்றுக்கொள்ளலாம்.

U.Y.G.E.P. திட்டத்தில் கடன் பெற்றால் அந்த நிறுவனத்திற்கு தமிழக அரசின் சிறுதொழில் நிறுவனங்களுக்கான மானியங்கள் மற்றும் சலுகைகள் கிடைக்குமா?
U.Y.G.E.P. திட்ட மானியமாக திட்ட முதலீட்டில் 15 சதவீதம் வழங்கப்படுகிறது. இது தவிர குறைந்த அழுத்த மானியம், வாட் மானியம், மின்னாக்கி மானியம் போன்ற சலுகைகள், விண்ணப்பதாரர் நடத்திவரும் தொழில் மற்றும் நிறுவன அமைவிட அடிப்படையில் மானியம் வழங்கப்படும்.

ஏற்கனவே வேறு ஒரு மானிய கடனுதவி திட்டத்தில் கடனுதவி பெற்று, கடனை முழுவதுமான திருப்பி செலுத்தியவர்கள், U.Y.G.E.P. திட்டத்தில் புதிதாக கடன் பெற முடியுமா?
ஏற்கனவே மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்றிருந்தால், இந்த திட்டத்தில் கடன் கேட்டு விண்ணப்பிக்க தகுதி இல்லை. நிதி நிறுவனங்களில் சிறுதொழில் கடனுதவியை பெற்று தகுதி அடிப்படையில் மானியம் பெற்று பயன் அடையவும்.

ஹாலோ பிளாக் தொழிலுக்கு, சிறு கட்டிடடம் கட்டுவதற்கான உத்தேச மதிப்பீட்டை திட்ட முதலீட்டில் சேர்த்துக் கொள்ளலாமா?
தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் உத்தேசித்துள்ள உற்பத்தி தொழில் தொடங்குதவற்கு தேவையான கட்டிடம், இயந்திர தளவாடம் மற்றும் நடைமுறை மூலதனம் ஆகியவற்றின் மொத்த திட்ட மதிப்பு ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பி.கு: உங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறுங்கள்!

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"