வீடுகளில் நடைபெறும் 97% பலாத்கார சம்பவங்கள்


நாட்டில் நடைபெறும் பலாத்கார சம்பவங்களில் 97% வீடுகளில்தான் நடைபெறுகிறது..வெளியிடங்களில் 3% அளவுக்கே பலாத்கார சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று டெல்லி போலீஸ் கமிஷன் நீரஜ்குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அடுத்தடுத்து பாலியல் பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் டெல்லி மாநகர போலீஸ் கமிஷனை மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போலீஸ் கமிஷனர் நீரஜ்குமார், என்னுடைய ராஜினாமாவால் பலாத்கார சம்பவங்களைத் தடுக்க முடியும் எனில் ஆயிரம் முறை நான் ராஜினாமா செய்ய வேண்டும். என்னுடைய ராஜினாமா மட்டுமே இந்த பிரச்சனைக்குத் தீர்வாக இருக்காது.

ஊடகங்களில் செய்தியாளர்கள் தவறான செய்திகளை பிரசுரித்தால் அதற்காக ஆசிரியர்கள் ராஜினாமா செய்வது இல்லையே.. சிறுமி பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய பிரதீப் என்பவனை பீகார் மாநிலம் லகிசராய் என்ற இடத்தில் கைது செய்து டெல்லிக்குக் கொண்டு வந்திருக்கிறோம்.

பொதுவாக பலாத்கார சம்பவங்கள் என்பவை சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நடைபெறுபவையே. அதுவும் 97% பாலியல் பலாத்கார சம்பவங்கள் வீடுகளில்தான் நடைபெறுகிறது. 3% சம்பவங்கள்தான் வெளியிடங்களில் நடைபெறுகின்றன.

இத்தகைய சம்பவங்களை காவல்துறையால் தடுக்க இயலாது. 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் அந்த சிறுமியின் தந்தைக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்படும் இரண்டு போலீசார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த 72 மணி நேரத்துக்குள் அனைத்தும் முடிவடைந்து விடும். நாங்கள் முன்னுதாரணமிக்க நடவடிக்கையை மேற்கொள்வோம் என்றார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"