முகத்தை அழகாக்கும் ஆசையில் அகோரமாக மாறிய பெண்


முகத்தை அழகாக்கிக் கொள்ளும் ஆசையில் சமையல் எண்ணெயையும் சிலிகானையும் ஊசி மூலம் முகத்தில் ஏற்றிக்கொண்ட மாடல் அழகியின் முகம் வீங்கிப் போய் விகாரமாக மாறிவிட்டது. அப்பா, அம்மாவுக்கே அவரை அடையாளம் தெரியாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. முகத்தை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவர முடியாது என்று டாக்டர்களும் கைவிரித்துவிட்டனர்.

தென்கொரியாவை சேர்ந்தவர் ஹங் மியாகு. இவருக்கு இப்போது வயது 48. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் அழகாக இருந்தவர் மாடலிங் துறையில் இறங்கினார். பேஷன் ஷோ, விளம்பரங்களில் பரபரப்பாக வலம் வந்தார். முகத்தை மேலும் அழகாக்கிக் கொள்ள அவருக்கு ஆசை ஏற்பட்டது. முகத்தில் கொழுப்பு சத்து ஏறினால் மேலும் அழகாகும் என்று யாரோ சொன்னதை நம்பி தனது 28 வயதில் சுய அழகு சிகிச்சையில் இறங்கினார். அதுவும் கொடூரமான சிகிச்சை முறை. கடையில் குறைந்த விலையில் கிடைக்கும் சிலிகான் ஜெல்லையும் சமையல் எண்ணெயையும் மாறி மாறி சிரிஞ் மூலம் முகத்தில் ஏற்றிக் கொள்வார். நாளாவட்டத்தில் குண்டான கன்னங்கள், வாளிப்பான சதையுடன் முகம் பளபளப்பாகவும் மாறியது. வியந்து போனவர் சுய அழகு சிகிச்சையை அடிக்கடி எடுத்துக் கொண்டார். சிறிது காலத்தில் ஜப்பான் சென்றவர் அங்கும் சுய அழகு சிகிச்சையை மேற்கொண்டார்.

சில ஆண்டுகளுக்கு பிறகு, அவரது முகத்தில் விபரீத மாற்றங்கள் ஏற்பட தொடங்கின. ஆங்காங்கே சதைகள் தொங்கின. கண், வாய் அருகில் உருண்டை உருண்டையாக சதைகள் சேர்ந்தன. ஆனால், ஊசி சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருக்கவே முடியாது என்ற நிலைக்கு ஹங் மியாகு தள்ளப்பட்டார். அதற்கு அடிமையாகவே மாறினார்.

10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த விபரீத சுய சிகிச்சையை மேற்கொண்டதன் விளைவு.. அவரது முகம் முழுவதுமாக உருக்குலைந்து விகாரமாக மாறியது. பெற்ற அப்பா, அம்மாவால்கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பயங்கரமாக அவரது முகம் மாறிவிட்டது.

வாய்ப்புகள் அனைத்து பறிபோய், அனைவரும் கேலியும் கிண்டலும் செய்தனர். உணவுக்கூட வழியில்லாததால் பழைய பேப்பர், இரும்பு கடையில் வேலைக்கு சேர்ந்தார். ஆதரவற்றோர்களுக்கு அரசு அளிக்கும் கருணை தொகை, பழைய கடையில் கொடுக்கும் சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்டினார்.

இதற்கிடையில், அவரது கடந்த கால பயங்கரம் பற்றிய தகவல்கள் டிவிக்களில் ஒளிபரப்பாயின. அதில் பேட்டியளித்த ஹங் மியாகு, தனது சிகிச்சைக்கு உதவும்படி கதறினார். நாடு முழுவதும் இருந்தும் நிதியுதவிகள் குவிந்தன. ஆஸ்பத்திரிக்கு சென்று தன் நிலைமை பற்றி எடுத்து கூறினார். அவரது முகம் மற்றும் கழுத்து பகுதியில் டாக்டர்கள் 10 முறை ஆபரேஷன் செய்து சிலிகான் மற்றும் தேவையற்ற கொழுப்பு, கட்டிகளை அகற்றினர். ஆனாலும், விகார தோற்றம் இன்னும் மாறவில்லை. அவரது முகத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வாய்ப்பே இல்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"