சென்னையில் குடித்தனம் நடத்தும் ஓரினச்சேர்க்கை வாலிபர்கள்!


திருவான்மியூரில் விக்ராந்த் பிரசன்னா (32), ராகுல் (22) ஆகிய இரு இளைஞர்களும் கணவன்- மனைவியாக வாழ்கிறார்கள்.

வெளிநாடுகள் பலவற்றில்தான் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து சேர்ந்து வாழ அனுமதி கேட்டு பேரணி நடத்துவதும், இது இயற்கைக்கு முரணானது அங்கீகரிக்க கூடாது என்ற குரல்களும் நாம் கேட்டதும், அறிந்ததும்தான்.நம் நாட்டிலும்… அதுவும் தமிழ்நாட்டில் இப்படிபட்டவர்கள் இருக்கிறார்கள் என்பது நமக்கு ஆச்சரியம்தானே..!

ஆணும், பெண்ணும் சேர்ந்ததுதானே வாழ்க்கை. இந்த உலகம் அப்படித்தானே இயங்குகிறது. இதில் ஒரே பாலினம் உள்ள இருவர் சேர்ந்து வாழ்வது சாத்தியமா? சரிதானா? இது ஒரு கலாச்சார சறுக்கல் ஆகாதா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு ராகுலின் தெளிவான பதில்…

நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன். எனக்கு சிறு வயதிலேயே பெண்களை விட ஆண்கள் மீது ஈர்ப்பு அதிகம். எங்கே, நாம் தவறு செய்கிறோமோ? வீட்டில் திட்டுவார்களோ என்று மனம் அலைபாய்ந்தது. எனக்குள் எழுந்த உணர்வுகளை வெளியே சொல்ல முடியாமல் தவித்தேன்.

பட்டப்படிப்பை முடித்து சுயமாக பேஷன் டிசைனிங் தொழில் செய்ய தொடங்கினேன். பெண்ணோடு திருமணம் செய்து வாழ்வதில் எனக்கு விருப்பமில்லை. இணைய தளத்தை உபயோகிக்கும் பழக்கம் இருந்ததால் என்னைப்போல் பலர் தவித்து கொண்டிருப்பதை அறிந்தேன்.

அப்போதுதான் விக்ராந்த் பிரசன்னா என்னைப் போன்ற இளைஞர்களுக்காக ஒரு அமைப்பை தொடங்கி இருந்ததை அறிந்தேன். அவர் ஏற்பாடு செய்த ஒரு விருந்து பார்ட்டியில் கலந்து கொண்டேன். என்னை போன்ற உணர்வு கொண்ட சுமார் 100 இளைஞர்கள் அந்த விருந்தில் கலந்து கொண்டார்கள்.

அதன் பிறகு விக்ராந்த் பிரசன்னாவோடு எனக்கு காதல். அடிக்கடி போனில் பேசினோம்.

சாட் பண்ணினோம். பீச், ஓட்டல் என்று சுற்றி எங்கள் அன்பை பகிர்ந்து கொண்டோம். எங்கள் பழக்கத்துக்கு இரு வீட்டிலும் எதிர்ப்புதான். அது அவர்கள் பிள்ளைகள் மீது கொண்ட பாசத்தால் உருவானது. ஆனால் எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை. மெல்ல மெல்ல அவர்களுக்கு புரிய வைத்தோம்.

எங்களை பிரிக்க முடியாது என்று உணர்ந்து அவர்கள் மவுனமாகிவிட்டார்கள். நாங்கள் இப்போது ஒன்றாய் சேர்ந்து வாழ்கிறோம். கணவன்- மனைவியை போல் நாங்களும் குடும்பமாய் வாழ்கிறோம்.

வாடகை வீட்டில் வசிக்கிறோம். அவர் (விக்ராந்த் பிரசன்னா) சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றுகிறார். தினமும் சமையல் வேலை என்னது. அவர் ஒத்தாசையாய் வந்து உதவி செய்வார்.

சாதாரண கணவன்- மனைவி போல் நாங்களும் சந்தோசமாக எங்கள் வாழ்க்கையை நடத்துகிறோம். ஒவ்வொரு விஷயத்திலும் ஒருவருக்கொருவர் அன்பை பொழிந்து வாழ்கிறோம்.

இது இயற்கைக்கு முரணாகாதா? என்கிறார்கள். எங்களுக்கு இப்படி ஒரு உணர்வை இறைவன்தானே படைத்து இருக்கிறான். லெஸ்பியன் பெண்களை போல்தான் நாங்களும். எங்களையும் அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும்.

வெறும் செக்ஸ் மட்டும் வாழ்க்கை அல்ல. அதையும் தாண்டி மனங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சரியான புரிதல் இல்லாததால்தான் எங்களை கொச்சை படுத்துகிறார்கள். ஆணும்- பெண்ணும் சேர்ந்து வாழ்வதை ஏற்பவர்கள் ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை ஏன் ஏற்க தயங்குகிறார்கள்?

எங்களை போல் பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள். சமூகம் ஏற்க தயங்குவதால் அவர்கள் தவித்து கொண்டிருக்கிறார்கள். இப்போது எங்கள் அமைப்புக்கு தனி வலைத்தளம் உருவாக்கி இருக்கிறோம். 4,500 பேர் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளார்கள்.

எங்களை போல் சென்னையில் மட்டும் 20 பேர் குடும்பமாக வாழ்கிறார்கள். இப்போது மணமகன் தேவை என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். இணைந்து வாழ விருப்புபவர்களை உடனே வாழுங்கள் என்று சேர்த்து வைக்க மாட்டோம். அவர்களுக்கு கவுன்சிலிங் உள்பட பல டெஸ்டுகள் உள்ளது. அதன் பிறகுதான் சேர்ந்து வாழ முடியும்.

ஒரே பாலினம் கொண்ட எங்களுக்கு மகிழ்வன் என்று பெயர் வைத்துள்ளோம். இதற்கு வாழ்க்கையை மகிழ்வோடு வாழ்பவர்கள் என்று அர்த்தம்.

எங்களை போன்றவர்களுக்கு உதவ கவுன்சிலிங் மற்றும் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி தருகிறோம். எங்களது கோரிக்கை எல்லாம் எங்கள் திருமணத்தையும் அரசு சட்டபூர்வமாக்க வேண்டும் என்பதுதான். அதற்காக தொடர்ந்து பேராடுவோம் என்றார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 13-ந்தேதி இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்து தனி வீடு அமர்த்தி வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்கள். இது நாலாம் ஆண்டு! வருகிற டிசம்பர் மாதம் 13-ந்தேதி மோதிரம் அணிவித்து நிச்சயதார்த்தம் செய்து கொள்கிறார்களாம்.

அரசு எப்போது சட்டப்படி அங்கீகரிக்கிறதோ அதுவரை இப்படியே சேர்ந்து வாழ்வோம். அங்கீகாரம் கிடைத்ததும் சென்னையில் நடைபெறும் முதல் திருமணமாக எங்கள் திருமணம் இருக்கும்…! அதற்கு எத்தனை ஆண்டுகளானாலும் காத்திருப்போம் என்கிறார்கள் இந்த தம்பதிகள்…?!

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"