செல்போன் வாங்கப் போறீங்களா?


1. மொபைலை மாற்றும்போது 'எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்' இருக்கிறதா என்று பார்த்து வாங்குவது நல்லது. நல்ல கடைகளாகப் பார்த்து மொபைலை மாற்றுங்கள். உங்களின் பழைய மொபைலுக்கு அவர்கள் சொல்லும் விலைக்கு உடனே தலையாட்டிவிடாதீர்கள். கூச்சப்படாமல் பேரம் பேசினால், உங்களுக்குக் கூடுதல் லாபம் கிடைப்பது நிச்சயம்.

2. பேட்டரியின் லைஃப் எந்த அளவுக்கு இருக்கும் என்பதைக் கவனமாகப் பாருங்கள். அடிக்கடி சார்ஜ் செய்வதுபோல் இருந்தால், நம்முடைய நேரத்தை சாப்பிடுவதோடு பணியையும் பாதிக்கும். அடிக்கடி சார்ஜ் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டால்... உடனே பேட்டரியை மாற்ற வேண்டியதுதான் என்று முடிவு செய்துவிடாதீர்கள். அது மொபைல் போனின் தொழில்நுட்பக் கோளாறாகவும் இருக்கலாம். முறைப்படி செக் செய்து கொள்ளுங்கள்.

3. மொபைல் வாங்கியதுமே.... சிம் கார்டு போட்டுப் பேசிப் பாருங்கள். தெளிவாக, சத்தமாகக் குரல் கேட்பது ரொம்ப முக்கியம். என்னதான் எக்ஸ்ட்ரா சமாசாரங்கள் இருந்தாலும்... பேசுவதற்கும் கேட்பதற்கும்தான் மொபைல் போன் என்பதை மறந்து விடாதீர்கள்.

4. மொபைல் போன் வாங்க நினைப்பவர்கள், நேரில் போய் வாங்குவதே மிக மிக நல்லது. பட்டன்கள் எல்லாம் நன்றாக இருக்கிறதா, சரியாக இருக்கிறதா என்பதைக் கவனிப்பது முக்கியம். 'ஆகா... வீடியோ இருக்கிறது, ஆடியோ இருக்கிறது, போட்டோ எடுக்கலாம்' என இத்யாதி இத்யாதிகளில் கவனம் செலுத்தி, முக்கியமான சமாசாரங்களை கோட்டை விட்டுவிடாதீர்கள்.

5. மொபைல் போன் வாங்கும் முன் அதைப் பற்றிய தகவல்களை நண்பர்களிடமோ, இணைய தளத்திலோ சில நாட்கள் அலசுங்கள். பிறகு, 'இதுதான் எனக்குத் தேவையான போன்' என முடிவெடுங்கள். தீர்மானம் செய்துவிட்ட பிறகு, கடைக்குச் செல்லுங்கள்.

6. காஸ்ட்லி போன் எனில் மொபைல் போனுக்கான இன்ஷுரன்ஸ் செய்து வாங்கிக் கொள்ளுங்கள். மொபைல் போன் கோளாறு, தீ, திருட்டு என்று எந்த விஷயங்களுக்கெல்லாம் இன்ஷுரன்ஸ் கவரேஜ் இருக்கிறது என்பதை விசாரித்த பிறகு பாலிஸி எடுப்பது நல்லது!

7. நீங்கள் மொபைல் போனை அடிக்கடி பயன்படுத்துபவரா..? அப்படியென்றால், 'அம்பாஸடர் மாதிரி' என்பார்களே... அதுமாதிரி தரமான, எல்லா சூழலையும் தாக்குப் பிடிக்கற மாடல் போன்களைத் தேர்ந்தெடுங்கள். அதாவது 'பேஸிக் மாடல்' என்றுகூட சொல்லலாம். 'டச் ஸ்க்ரீன்' போன்ற 'ஃபேன்ஸி' மற்றும் அதிக சென்ஸிடிவ்வான தொழில்நுட்பங்கள் இல்லாத மாடலாக இருப்பது பயன் தரும். அத்தகைய போன்கள் நீண்ட நாள் உழைக்கவும் செய்யும்.

8. 'இரண்டு சிம்', 'குறைந்த விலை' என்று சீனா போன்ற வெளிநாட்டு போன்களை வாங்கி விடாதீர்கள். அந்த போன்களில் உள்ள ஆன்டெனா மூலம் ரேடியேஷன்கள் அதிகமாக ரிஸீவாகும். இது, உடலுக்கு ஊறு விளைவிக்கும்.

சிம் கார்டு ஜாக்கிரதை!

  1. செல்போன் வைத்திருக்கிறீர்களா... சிம் கார்டு வாங்கும்போது, எந்த நிறுவனத்தின் (சர்வீஸ் புரவைடர்) சேவை, உங்களுக்குத் தேவை என்பதை தீர ஆராய்ந்து முடிவு செய்யுங்கள். வழக்கமாக எந்தெந்த ஊர்களுக்குச் செல்வீர்களோ... அங்கெல்லாம் கவரேஜ் இருக்கும் சர்வீஸ் புரவைடராக இருப்பதுதான் உங்களுக்கு லாபகரமானதாக இருக்கும்.
  2. மொபைல் சர்வீஸ் வாங்கும்போது எஸ்.எம்.எஸ்., இன்டர்நெட், கால் சார்ஜ், மாதக் கட்டணம் என அனைத்தையும் கவனியுங்கள். பலர் நாசூக்காக மறைமுகக் கட்டணங்களை வைத்திருப்பார்கள்.
  3. கால் சார்ஜ் விஷயத்தில் அதிக கவனம் தேவை. 'நாங்கள், நிமிடத்தில் வசூலிக்கிறோம்...', 'நாங்கள் விநாடிகளில்தான் வசூலிக்கிறோம்...' என்றெல்லாம் வகை வகையாக வலை விரிப்பார்கள். வார்த்தைகளில் மயங்கினால் பாக்கெட் பணால்! சர்வீஸ் புரவைடர்களிடம் பேசி, அவர்களின் கால் கட்டணங்களைத் (டேரீஃப்) தெரிந்து கொண்டு, அலசி ஆராய்ந்து எது நமக்கு லாபகரமானது என்பதை கண்டுபிடிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.
  4. போனில் இன்டர்நெட் இருக்கிறது, வீடியோ சேட்டிங் இருக்கிறது என்பதற்காக சதா அவற்றையே சுழற்றிக் கொண்டிருந்தால்... சத்தம் இல்லாமல் பைசா கரைய ஆரம்பித்துவிடும். 'அதெல்லாம் நமக்குத் தேவையா' என்று தெரிந்து, அந்த வசதிகளைப் பெற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
  5. ஹலோ ட்யூன்/காலர் ட்யூன் எனப்படும் வசதியை ஏற்படுத்தும் முன்பாக அதனால் என்ன பயன் என்பதை முதலில் உணரவேண்டியது அவசியம். அந்த ட்யூன் உங்களுக்குப் பிடித்த பாடலாக இருக்கலாம். ஆனால், எதிர் முனையில் பேசுபவர்தான் அதைக் கேட்கப்போகிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். அந்தப் பாடல் சிலருக்கு எரிச்சல் ஊட்டுவதாக அமைந்துவிட்டால்... உங்கள் மீதான அபிப்பிராயத்தில் பேதங்கள் வரலாம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"