சிறுமியை சீரழித்த சாமியார்...தாயே துணை போன கொடுமை!


சென்னையில் 14 வயது சிறுமியை ஒரு சாமியார் பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்துள்ளார். இந்த கொடும் செயலுக்கு அந்த சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்தது அதிர்ச்சியை பரப்பியுள்ளது. சாமியார் மற்றும் தாயார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த சிறுமி மேலும் சீரழிந்து போக காரணமாக இருந்த 4 பேர் தலைமறைவாகி விட்டனர்.

பெரம்பூரைச் சேர்ந்தவர் அந்த சிறுமி. 14 வயதாகிறது. அவரது தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். தாயார் சசிகலாவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு பெரம்பூரில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு மகளை அழைத்துச் சென்றார் சசிகலா. அங்கு அறவழி சித்தர் என்ற குறி சொல்லும் சாமியாரிடம் அறிமுகப்படுத்தினார். அந்த சாமியாருக்கு வயது 48 ஆகிறது. அந்த சாமியார், சசிகலாவிடம் இரவு பூஜை செய்தால் எல்லாம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நள்ளிரவில் பூஜைக்கு ஏற்பாடு செய்தார் அந்த சாமியார்.

அன்று இரவு பூஜைக்குப் பதில் சிறுமியை தனது காம இச்சைக்குப் பயன்படுத்தி கற்பழித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமி, தனது தாயாரிடம் வந்து கதறியுள்ளார். அதற்கு அந்தத் தாயார், சாமியார் எது செய்தாலும் அது நல்லதுக்குத்தான் என்று கூறி சமாதானப்படுத்தியுள்ளார் மகளை. சிறுமியின் தாயாரே இதைக் கண்டுகொள்ளாமல் விட்டதால் சாமியார் பலமுறை சிறுமியை வரவழைத்து வெறியாட்டம் போட்டுள்ளார். அத்தோடு நில்லாமல் தனது நண்பரான குமார் என்பவரிடம் சிறுமியை ஒப்படைத்து விபச்சாரத்திலும் ஈடுபடுத்த கூறியுள்ளார். குமார் சிறுமியை சீரழித்தார். பின்னர் செல்வம் என்பவரிடம் அனுப்பப்பட்டார் சிறுமி.

இதையடுத்து செல்வம், அவரது மனைவி ஜெயா, ஜெயாவின் தோழி லதா ஆகியோர் அடங்கிய கும்பலிடம் சிக்கிக் கொண்டார் சிறுமி. இந்தக் கும்பல், சிறுமியை வைத்து விபச்சாரத்தில் இறங்கியது. தினசரி 10 பேர் வரை அந்த சிறுமி பந்தாடப்பட்டுள்ளார். இதில் கிடைத்த பணத்திலிருந்து சிறு பகுதியை சிறுமியின் தாயாரிடமும் கொடுத்துள்ளனர். அவரும் வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்துள்ளார். கடந்த பல மாதங்களாக இப்படி சித்திரவதைப்பட்ட சிறுமி கடந்த மாதம் செல்வம் வீட்டிலிருந்து தப்பி வெளியேறினார்.

எங்கு போவது என்று தெரியாமல் திருப்பதிக்குப் போனார். அங்கு மாங்காய் வாங்கி வி்ற்றுப் பிழைக்க ஆரம்பித்தார். இரவில் சாமி தரிசனம் செய்யும் கியூவில் சென்று அந்த பக்தர்களுடன் சேர்ந்து தூங்கி சமாளித்துள்ளார். ஆனால் தினசரி இப்படி அந்த சிறுமி வருவதைப் பார்த்த சிலர் சந்தேகப்பட்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்து அவர்களிடம் சிறுமியை ஒப்படைத்தனர். பின்னர் போலீஸார், அந்த சிறுமியை சைல்ட் ஹெல்ப்லைன் ஊழியர்களைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில்தான் நடந்த கொடுமை அம்பலத்திற்கு வந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சிறுமியின் தாயார், சாமியார் ஆகியோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். செல்வம், குமார், லதா, ஜெயா ஆகியோரைத் தற்போது போலீஸார் தேடி வருகின்றனர். சாமியாரின் ஆசிரமத்தில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது அதில் பல்வேறு இளம் பெண்களின் படங்கள் சிக்கியதாக தெரிகிறது. அவர் எத்தனை பேர் வாழ்க்கையை இப்படி சீரழித்தார் என்பதை கண்டுபிடிக்க அவரை தீவிரமாக விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"