உடலை விட்டு ஆவி பிரியும் கணத்தில் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்! ஆய்வில் தகவல்!!


1975க்கு பின் பல நாடுகளிலும் இந்த மரண விளிம்பு அனுபவ ஆராய்ச்சிகள் மிகுந்த ஆர்வத்துடன் நடைபெற ஆரம்பித்தன. அதில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் முன்னிடம் வகுத்தன. டாக்டர் கென்னத் ரிங் (Dr. Kenneth Ring) என்பவரும் இந்த ஆராய்ச்சிகளை பல வருடங்கள் செய்து 1993 ஆம் ஆண்டு தன் ஆராய்ச்சி முடிவுகளை விரிவாக வெளியிட்டார்.

டாக்டர் கென்னத் ரிங், ஷரான் கூப்பர் (Sharon Cooper)என்பவரோடு சேர்ந்து இரண்டாண்டு காலம் குருடர்கள் பெற்ற மரண விளிம்பு ஆராய்ச்சிகளை ஆராய்ந்திருக்கிறார். அதில் சில பிறவிக் குருடர்கள் கூட தங்கள் உடல்லை விட்டுப் பிரிந்த பின் எல்லாவற்றையும் தெளிவாகக் கண்டதை விவரித்ததாகச் சொல்கிறார். இது போன்ற ஆராய்ச்சிகளை பிற்காலத்தில் டாக்டர் ப்ரூஸ் க்ரேசன் (Dr. Bruce Greyson), டாக்டர் பிம் வான் லோம்மெல் (Dr. Pim van Lommel), டாக்டர் மைக்கேல் சாபொம் (Dr. Michael Sabom) போன்றவர்களும் செய்து டாக்டர் ரேமண்ட் மூடியின் ஆராய்ச்சி முடிவுகளை உறுதி செய்தனர்.

டாக்டர் ப்ரூஸ் க்ரேசன் இன்னும் ஒருபடி மேலே போய் மரண விளிம்பு அனுபவத்தின் போது மயக்க மருந்தின் தாக்கத்தில் சம்பந்தப்பட்ட மனிதர் இருந்தாரா என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டார். ஒருவேளை சிகிச்சையின் போது தரப்பட்ட மயக்கமருந்தின் தாக்கத்தால் கற்பனைக் காட்சியைக் காண்கிற நிலை இருக்கிறதா என்றும் உறுதிப்படுத்திக் கொள்ள எண்ணினார். ஆனால் மயக்க மருந்து ஆதிக்கத்தில் இல்லாத நபர்கள், மயக்க மருந்து ஆதிக்கத்தில் இருந்தவர்களை விட அதிகத் தெளிவுடன் அந்த நிகழ்ச்சிகளை விவரிக்க முடிந்ததைத் தன்னால் அறிய முடிந்தது என்றும் கூறினார்.

மரண விளிம்பு அனுபவங்களில் பொதுவாக எல்லோராலும் சொல்லப்பட்ட ஒன்பது விஷயங்கள்.

1) ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலி கேட்டல்
ஐம்புலன்களும் அடங்க ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் மரணம் நெருங்குகிறது உணரும் அந்த நேரத்தில் பலரும் ஒரு வித்தியாசமான ரீங்கார ஒலியைக் கேட்டிருக்கிறார்கள். அது இனிமையாக இல்லாத ஒருவித அசாதாரண ஒலியாக இருந்தது என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

2) உடலை விட்டு வெளியேறிய அனுபவம்
அனைவருமே தங்கள் உடலைப் பிரிந்து அந்தரத்தில் மிதப்பது போல உணர்ந்ததாகத் தெரிவித்தார்கள். மருத்துவர்கள் சூழ நின்ற தங்கள் உடலை அவர்கள் தெளிவாகப் பார்க்க முடிந்ததாகத் தெரிவித்தார்கள். அந்த அறையில் மருத்துவர்களும், நர்சுகளும் பேசிக்கொண்டதை அவர்களால் கேட்க முடிந்ததெனக் கூறினார்கள். மருத்துவர்களும், மற்றவர்களும் என்ன செய்தார்கள், என்ன பேசினார்கள் என்பதை அப்படியே அவர்கள் சொன்னார்கள்.

3) அமைதியும் வலியின்மையும்
மரண சமயத்தில் எத்தனை வலி இருந்தாலும் உடலை விட்டு ஆவி பிரியும் கணத்தில் அந்த வலி மறைந்து விடுகிறது என்றும் பேரமைதி கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.

4) சுரங்கவழிப் பாதை அனுபவம்
கும்மிருட்டிற்கு ஒரு சுரங்கவழிப் பாதை வழியாக மின்னல் வேகத்தில் இழுக்கப்பட்டதாகவும் அந்த சுரங்க வழிப் பாதையின் முடிவில் பளிச்சிடும் பொன்னிற அல்லது வெள்ளை நிற ஒளிக்குச் சென்றதாகக் குறிப்பிட்டார்கள்.

5) பூமியைப் பார்த்தல்
சிலர் சுரங்கவழிப் பாதையில் இழுத்துச் செல்லப்படாமல் மேல் நோக்கி சொர்க்கம் போன்ற இடத்திற்கு வேகமாகப் போவதாய் உணர்ந்ததாகவும் பூமியை விட்டும் வெளியே போய் பூமி அண்டசராசரத்தில் ஜொலிப்பதைப் பார்த்ததாகவும் சொன்னார்கள்.

6) ஒளி மனிதர்களைக் காணுதல்
சுரங்கவழிப்பாதையின் இறுதியிலோ, பூமியை விட்டும் விலகிப் போன சொர்க்க பூமியிலோ அவர்கள் உள்ளிருந்து ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் மனிதர்களைக் கண்டதாகச் சொல்கிறர்கள். சில சமயங்களில் முன்பே இறந்து போயிருந்த ஒருசில நண்பர்களோ, நெருங்கிய உறவினர்களோ அங்கிருப்பதைப் பார்த்ததாகச் சிலர் சொன்னார்கள்.

7) அருட்பெரும் ஜோதியைக் காணுதல்
ஒளி படைத்த மனிதர்களைக் கண்ட பிறகு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பிரகாசமான தெய்வீகப் பிறவியைப் பலரும் சொன்னார்கள். ஆனாலும் அப்பேரொளி கண்களைக் கூசும் படியானதாக இருக்கவில்லை என்றும் கூறினார்கள். அந்த தெய்வீகப் பிறவியை மதத்தினர் அவரவர் மதக்கடவுளாகக் கண்டார்கள்.

8) வாழ்ந்த வாழ்க்கையை பரிசீலித்தல்
தெய்வீக சக்தி முன் தங்கள் வாழ்க்கை பரிசீலிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தார்கள். வாழ்க்கையின் மிக முக்கிய கட்டங்கள் திரும்பவும் நடப்பதாக ஒரு சாட்சி போல், திரையில் காண்பது போல் தத்ரூபமாகக் கண்டதாகவும் சொன்னார்கள்.

9) வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை 
தெய்வீகப்பேரொளியுள்ள தேவதையோ, தெய்வமோ வாழ்க்கை இனியும் முடிந்து விடவில்லை என்று தெரிவித்தது போல் கிட்டத்தட்ட அனைவரும் தெரிவித்தார்கள். திரும்பிப் போகும்படி கூறப்பட்டதாக சிலரும், தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியங்கள் இனியும் உள்ளன என்று தாங்கள் அந்த நேரத்தில் தீவிரமாக எண்ணியதாகச் சிலரும் சொன்னார்கள்.

இந்த கருத்துப் பரிமாற்றங்கள் யாவும் அவரவர் தாய்மொழியில் பேசப்பட்டதாக அவர்கள் எவரும் எண்ணவில்லை. ஆனாலும் கருத்துப் பரிமாற்றம் நடந்துள்ளது என்பதை ஒத்துக் கொள்ளும் அவர்களுக்கு அதை எப்படி என்று விவரிக்கத் தெரியவில்லை.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"