மோட்டார் இன்சூரன்ஸ்

பாலிசிதாரர்கள் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் தங்களின் இன்சூரன்ஸ் நிறுவனங்களைப் பற்றி ஆய்வு செய்வது நல்லது. அதன் மூலம் பாலிசியை மாற்ற வேண்டுமா அல்லது நிறுவனத்தை மாற்ற வேண்டுமா அல்லது சந்தையில் வேறு சிறந்த பாலிசி உள்ளதா என்பதை அறிய முடியும். எடுத்துக்காட்டாக காரின் உதிரிப் பாகங்களுக்கான ஒரு நிலையான இன்சூரன்ஸ் பாலிசியை ஒரு பாலிசிதாரர் விரும்பலாம். ஆனால் தற்போது அவர் வைத்திருக்கும் பாலிசி அதற்கான வசதியை வழங்காது. அந்த நிலையில் அவர் தனது தேவையை நிறைவு செய்யும் புது பாலிசியை வாங்கலாம்.

காரின் இன்சூரன்ஸ் பாலிசியைப் பற்றி அவ்வப்போது பாலிசிதாரர் திறனாய்வு செய்வது நல்லது. அதன் மூலம் அவர் வேறொரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுக்க வேண்டுமா என்பதை அறிந்து அதற்கேற்ப முடிவு எடுக்க முடியும். ஆனால் முடிவு எடுப்பதில் அவசரம் கூடாது. புதிய நிறுவனத்தில் பாலிசி எடுப்பதற்கு முன்பு ஏற்கனவே உள்ள நிறுவனத்தோடு கலந்து பேசி தற்போது உள்ள பாலிசியில் தேவைக்கேற்ப மாற்றம் செய்ய முடியுமா என்பதை அறிய வேண்டும். அவ்வாறு முடியாத பட்சத்தில் வேறு நிறுவனத்தில் பாலிசி எடுக்கலாம். நிறைய பாலிசிதாரர்கள் அடிக்கடி தெளிவு இல்லாமல் இன்சூரன்ஸ் நிறுவனங்களை மாற்றிக் கொண்டு இருக்கின்றனர். அது சிறப்பாக அமையாது. அவ்வாறு மாற்றும் போது தீர்க்கமாக ஆராய்ந்து முடியு எடுக்க வேண்டும்.

செய்ய வேண்டியவை:

* இது போன்ற பாலிஸிகளை யார் மூலமும் வாங்கிக் கொள்ளலாம் என்றும், உங்கள் வாகன டீலர் மூலமாக மட்டுமே பெற வேண்டும் என்று எவ்வித நிபந்தனையும் கிடையாது என்றும் அறிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
* உங்கள் வாகன டீலர் மூலம் இன்சூரன்ஸுக்கு ஏற்பாடு செய்திருந்தாலும், விண்ணப்பப் படிவத்தை நீங்களே நிரப்பவும்.
* விண்ணப்பப் படிவத்தை மிகவும் கவனமாகவும், முழுமையாகவும், உண்மையான தகவல்களின் அடிப்படையிலும் நிரப்புங்கள்.
* பரஸ்பர ஒப்புதலுக்குப் பின் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தின் நகல் ஒன்றை பத்திரமாக ஆவணப்படுத்திக் கொள்ளுங்கள்.
* பாலிஸி பற்றிய தகவல் தொகுப்பேட்டை கவனமாகப் படித்துப் பார்த்து, அந்த இன்சூரன்ஸுக்குள் அடங்கக்கூடியவை எவை, அடங்காதவை எவை என்பது பற்றி தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.
* இதில் கூடுதலாகப் பெறக்கூடிய பாதுகாப்பு பற்றிய தகவல்களை கேட்டு அறிந்து கொண்டு, அவற்றில் எது உங்களுக்கு தேவை என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்
* ஆர்சி புத்தகம், பெர்மிட் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஆவணங்களை சரிபார்ப்புக்காக இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சமர்ப்பியுங்கள்.
* இந்த ஆவணங்கள் அனைத்தையும் அவ்வப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து புதுப்பித்து வைத்துக் கொள்வது அவசியமானது.

செய்யக்கூடாதவை:

* உங்கள் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேறு யாரையும் அனுமதிக்காதீர்கள்.
* படிவத்தில் எந்த கட்டத்தையும் நிரப்பாமல் வெறுமையாக விட வேண்டாம்
* உங்கள் பாலிஸியை இடைவெளி விடாது உரிய நேரத்தில் புதுப்பித்து வைத்துக்கொள்ள மறக்காதீர்கள்.
* ஏற்கெனவே லைசென்ஸ் எடுக்கப்பட்டு, உபயோகப்படுத்தப்பட்ட காரை வாங்கும் போது, சரியான நடைமுறை என்ன என்பது பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
* நீங்கள் இன்சூர் செய்யும் வாகனத்தின் உபயோகத்தைப் பற்றிய பொய்யான தகவல்களைக் கொடுப்பது தவறான செயல்.

கார் உரிமையாளர்கள் தங்களது இன்சூரன்ஸ் நிறுவனங்களை அடிக்கடி மாற்ற காரணம்!

1. நிலையில்லாத கட்டணம்: ஏராளமான வாடிக்கையாளர்களைச் சேர்க்க வேண்டும் என்பதற்காக பல இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கவர்ச்சிகரமான திட்டங்களை அள்ளிவிடுகின்றனர். ஆனால் அவர்கள் அறிவித்த திட்டங்களைவிட சீரான இடைவெளியில் அதிகமான பணத்தைச் செலுத்த வேண்டி இருப்பதாக பாலிசிதாரர்கள் கூறுகின்றனர். அதனால் பல பாலிசிதாரர்கள் தங்களது இன்சூரன்ஸ் நிறுவனங்களை அடிக்கடி மாற்றிவிடுகின்றனர். எனவே, ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுப்பதற்கு முன்பு பல நிறுவனங்களின் பாலிசிகளை ஒப்பிட்டு, பிடித்த நிறுவனத்தில் பாலிசி எடுப்பது சிறந்ததாக இருக்கும்.

2. பாலிசிதாரர்கள் தங்களது இன்சூரன்ஸ் நிறுவனங்களை அடிக்கடி மாற்ற முக்கிய காரணம் பாலிசிதாரர்களின் தேவைகளை முழுமையாக நிறைவு செய்யாத பாலிசி ஆகும். அவ்வாறு பாலிசிதாரரின் தேவைகளை அந்நிறுவனம் முழுமையாக நிறைவு செய்யாத போது அவர் வேறொரு நிறுவனத்தை நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறரார்.

3. ஒருசில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பாலிசிதாரரின் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதில் கால தாமதம் செய்கின்றன. அதுபோல் நீண்ட ஒழுங்கு முறைகளையும் வைத்திருக்கின்றன. அதனால் பாலிசிதாரர்கள் கோபமும், விரக்தியும் அடைந்து புதிய நிறுவனங்களை நாடுகின்றனர்.

4. ஒரு சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களான பாலிசிதாரர்களுக்கு முறையான மற்றும் நிறைவான சேவைகளை வழங்குவதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. வாடிக்கையாளரிடம் தமது பாலிசிகளை விற்றவுடன் அவர்களை முழுமையாக மறந்துவிடுகின்றன. அதுபோல் பாலிசிதாரர்கள் தமது இன்சூரன்ஸ் பணத்தைத் திரும்ப பெறுவதற்காக நிறுவனத்தை நாடும் போது அவர்கள் முறையாக பதில் அளிக்கவும் மறுத்துவிடுகின்றனர். அதனால் பல பாலிசிதாரர்கள் தங்களது இன்சூரன்ஸ் நிறுவனங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கின்றனர்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"