பூப்படையும் போது ஏற்படும் மாற்றங்கள்


ஒவ்வொரு பெண்ணிலும் பூப்படைதலினால் ஏற்படுகின்ற சடுதியான மாற்றங்கள் பற்றி நிறையச் சந்தேகங்கள் எழும். சில பெண்கள் இதை சாதாரணமான நிகழ்வாக ஏற்றுக் கொண்டு சந்தோசப் பட்டாலும் சில பெண்களிலே இது பற்றிய போதிய அறிவின்மையால் பல மன உளைச்சல்கள் ஏற்படலாம்.

இதைத் தவிர்க்கும் முகமாக ஒவ்வொரு பெண்ணுக்கும் பூப்படைதலின் போது நடைபெறும் மாற்றங்கள் பற்றி போதிய அறிவு வழங்கப்பட வேண்டும்.

இந்த அறிவினை வழங்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கிறது. பூப்படைதலின் முதற் கட்டமாக ஒரு பெண்ணின் மார்பு வளர்ச்சி ஆரம்பிக்கும்.

அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய அசௌகரியமாக இருக்கலாம். தொடர்ந்து அவர்களின் அக்குள் மற்றும் பிறப்புறுப்புப் பகுதியில் மயிர்கள் வளருதல்.

இந்த புதிய மாற்றங்கள் அவர்களின் பூப்படைதலின் ஆரம்ப நிலை என்றும் இதுவே ஒவ்வொரு பெண்ணிலும் நடைபெறும் சாதாரண நிகழ்வு என்றும் அடிப்படை அறிவை அந்த பெண்ணிற்கு புகட்டவேண்டியது பெற்றோரின் கடமையாகும்.

குறிப்பாக தாய் இது பற்றி தன் பெண்ணோடு மனது விட்டு உரையாட வேண்டும். இந்த நேரத்திலேயே அடுத்தகட்டமாக ஆரம்பிக்கப்போகும் மாதவிடாய் பற்றி அது ஆரம்பிக்கும் முன்னமே எடுத்துக் கூறி அதை அந்தக் பிள்ளை சாதாரணமான நிகழ்வாக ஏற்றுக் கொள்ளும் மன நிலையை உருவாக்க வேண்டியதும் ஒரு தாயின் கடமையாகும்.

சிலவேளைகளில் தாய் மாதவிடாய் காரணமாக சில அசௌகரியங்களை சந்திப்பவராக இருக்கலாம். ஆனாலும் தன் பிள்ளையிடம் அது பற்றி கூறாமல் மாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணிலும் ஏற்படும் ஒரு சாதாரண நிகழ்வு என்றும் அதுவே அவர்களின் பெண்மைக்கு அடையாளமாக அமைவதோடு பிற்காலத்தில் அவர்களிற்கு தாய்மைத் தன்மையை அழிக்கப் போவது என்று கூறி அவர்களை மாத விடாயை சந்தோசமாக ஏற்றுக் கொள்ளுபடி செய்ய வேண்டும்.

அத்தோடு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தப் போக்கினை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றியும் பூரணமான அறிவை அது ஏற்படுவதற்கு முன்னமே ஒவ்வொரு பெண் பிள்ளைக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டியதும் ஒரு தாயின் கடமையாகும்.

மேலும் மாதவிடாய் சம்பந்தமாக அந்தப் பெண் பிள்ளையின் மனதிலே நிறையச் சந்தேகங்கள் எழலாம். குறிப்பாக,

1. மாதவிடாய் காலத்தில்எத்தனை நாளைக்கு இரத்தப் போக்கு இருக்கும்?

2.மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி ஏற்படுமா?

3.மாதவிடாய் காலத்தில் தான் குளிக்கலாமா?

4.மாதவிடாய் காலத்தில் தான் விளையாடலாமா?

இந்த சந்தேகங்களை யாரிடம் கேட்பது என்று தெரியாமல் அவர்கள் திண்டாடிக் கொண்டிருக்கலாம்.

தாய் இதுபற்றி தானாகவே பேசத் தொடங்கி இது பற்றிய விபரங்களை பெண்ணுக்கு முழுமையாக தெரியப் படுத்த வேண்டும்.

குறிப்பாக மாதவிடாய் மாதத்திற்கு ஒரு முறை ஏற்பட்டாலும் சரியாக எத்தனை நாளுக்கு ஒருமுறை ஏற்படும் என்பது பெண்ணுக்கு பெண் வேறுபாடும். 21.நாட்களில் இருந்து 35 நாட்களுக்குள் மாதவிடாய் ஏற்படுவது சாதாரணமானது என்று தெரியப்படுத்த வேண்டும் .

அதாவது சில பெண்களிலே 21 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஏற்படும்.சில பேர்ல32 நாட்களுக்கு ஒருமுறையோ அல்லதுசில பேரிலே 35 நாட்களுக்கு ஒரு முறையோ ஏற்படலாம்.

21 தொடக்கம் 35 நாட்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மாதவிடாய் ஏற்படுவது சாதாரணமானது என்றும் இது சரியாக ஒவ்வொரு மாதத்திற்கும்(30நாட்கள்) ஒருமுறைதான் ஏற்பட வேண்டியதில்லை என்றும் தெளிவு படுத்த வேண்டும்.

அடுத்ததாக மாதவிடாய் காலத்தில் மிதமான வயிற்று வலி ஏற்படலாம் என்றும் இது சில நாட்களுக்கே இருக்கும் என்று ஆரம்பத்திலேயே சொல்லி வைக்க வேண்டும்.

மேலும் மாதவிடாய் காலத்தில் சாதாரணமான நடவடிக்கைகள் (சைக்கிள் ஓடுதல், நடனமாடுதல், விளையாடுதல்) போன்றவற்றிலும் ஈடுபடலாம் என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு தாயும் தன் பெண் பிள்ளையை மாதவிடாய் ஆரம்பத்தினாலும் , பூப்படைதளினாலும் ஏற்படப் போகும் மாற்றங்களை எதிர்கொள்ளும் முகமாக தயார் படுத்த வேண்டும்..

பிரித்தானியாவில் உள்ள பிறிஸ்டல் பல்கலைக்கழகம் செய்த ஆய்வின்படி பதினொரு வயது ஆறு மாதத்திற்கு முன் பூப்படையும் பெண்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

பெண்களின் பூப்படைவதற்கு உகந்த வயது 12வருடம் 6 மாதம் என்றும் தெரிவிக்கின்றனர். Avon Longitudinal Study of Parents and Children என்ற பெயரில் 2184 பெண்களிடை நீண்ட கால அடிப்படையில் செய்த ஆய்வில் இருந்து இந்த முடிவை ஆய்வுத்தலைவர் Dr Carol Joinson வெளியிட்டுள்ளார். பதினொன்றரை வயதிற்கு முன்னர் பூப்படையும் பெண்கள் 13, 14 வயதளவில் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். பதின்முன்றரை வயதிற்கு பிறகு பூப்படையும் பெண்கள் மிகக்குறைந்த அளவிலேயே மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.

பூப்படைவது பெண்களின் உடலிலும் உள்ளத்திலும் பல மாறுதல்களை ஏற்படுத்துகிறது.மாற்றமடையும் ஹோமோன்களும் பெற்றோருடன் ஏற்படும் முரண்பாடுகளும் தனது உடல்பற்றிய உருவப் பதிவும் பூப்படையும் பெண்களைப்பாதிக்கிறது. இவை சிறு வயதில் பூப்படையும் பெண்களுக்கு பல மன உளைச்சல்களைக் கொடுக்கிறது.

பிற்கால வாழ்க்கையிலும் இளவயதில் பூப்படைதல் மன அழுத்தத்தை கொண்டுவருமா என்பதை பற்றி அறிய இன்னும் ஆய்வுகள் தேவைப்படுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"