மாதவிடாய்ச் சுழற்சியைக் கட்டுப்படுத்தும் மேலதிகாரியாகச் செயற்படுவது மூளையின் அடித்தளச்சுரப்பி (hypothalamus) எனும் அமைப்பு. அதுவே Gonadotropin releasing hormone (GnRH) என்ற இயக்கநீரை உருவாக்குகிறது. Gonads என்றால் ஆண் பெண் பாலணுக்களை (முட்டை/விந்து) உற்பத்தி செய்யும் உறுப்புகள்.
ஆண்களில் உள்ள gonad, விந்துகளை உற்பத்தி செய்யும் விந்தகம்/விதைப்பை (testes), பெண்களில் முட்டைகளை உற்பத்தி செய்யும் சூலகங்கள் (ovaries). Gonadotropins இந்தப் பாலணு உற்பத்தி செய்யும் உறுப்புகளைச் செயற்படத் துண்டும் இயக்கநீர்கள். Gonadotropins ஜ உருவாக்கி வேளியேற்று என மூளையின் முன் கபச் சுரப்பிக்கு (anterior pituitary gland) உத்தரவு பிறப்பிப்பதே இந்த GnRH இன் வேலை.
GnRH தகவல் கொடுத்தவுடன் முன் கபச் சுரப்பி Gonadotropins ஆன முட்டைக் கூட்டைத் தூண்டும் இயக்க நீரையும் (Follicle Stimulating Hormone; FSH) லூட்டின் ஊக்கி இயக்க நீரையும் (Luteinizing Hormone; LH) உருவாக்கி வேளியேற்றும். இவை இரண்டும் தகவல் சொல்லப்போவது சூலகங்களுக்கு. FSH முட்டைக் கூடு (follicle; முட்டையும் அதற்கு உதவியாக சுற்றிவர இருக்கும் பல செல்களும்) விருத்தியடையத் தூண்டும் இயக்க நீர். LH, விருத்தியடையத் தொடங்கிய முட்டைக் கூட்டை முதலில் பெண்மை இயக்கு நீரைச் சுரக்கவும் (Estrogen) பின் முட்டையை வெளியேற்றவும் தூண்டும்.
முட்டை வேளியேறியபின் எஞ்சியுள்ள முட்டைக் கூடு கருமுட்டைப் பை நீர்க்கட்டி (Corpus luteum) எனப்படும். முட்டை வெளியேறி அதன் விதி என்ன என நிச்சயமாகும் வரையிலும் (கருக்கட்டலா/சாவா), அதைப் பாதுகாப்பதற்காக இந்த Corpus luteum த்தைத் தொடர்ந்து பெண்மை இயக்கு நீரையும் கருப்பை இயக்கு நீரையும் (Progesterone)சுரக்கத்தூண்டுவதும் இந்த LH தான்.
பெண்மை இயக்க நீரையும் (Estrogen) கருப்பை இயக்கு நீரையும் (Progesterone) அநேகமானவர்களுக்குத் தெரிந்திருக்கும். இவை ஒவ்வொன்றிலும் பல வகை இருப்பினும் எல்லாவற்றையும் ஒன்றாக Estrogen என்றும் Progesterone என்றுமே அழைப்பர். Estrogen பூப்பெய்தும் போது பலோப்பியன் குழாய்களின் வளர்ச்சிக்கு, கருப்பையின், பெண்ணுறுப்பின் வளர்ச்சிக்கு, மார்பகங்காளின் விருத்திக்கு என பெண்ணின் உடலில் பல வகைகளில் செயற்படுகிறது.
Progesterone உம் கருப்பையின் அக உறையின் விருத்திக்கு, அதை கருவிற்கு ஏற்ற இடமாக மாற்றுவதற்கு, முட்டை வேளியேற்றப்பட்ட பின் முட்டைக்கு போஸாக்கு வழங்குவதற்கு, பின் கர்ப்பகாலத்தில் கருப்பையின் நிலையைத் தக்கவைப்பதற்கெனப் பல செயல்களில் ஈடுபடுகின்றது.
கடைசியாக மேலிடத்திலிருந்து உத்தரவு வந்து Estrogen உம் progesterone உம் போதுமானளவு உற்பத்திசெய்தாயிற்று எனும் கட்டத்தில் இவ்விரு இயக்க நீர்களும் முன்கபச்சுரப்பிக்கும் மூளையின் அடித்தளச் சுரப்பிக்கும் அவர்களின் இயக்கநீர் உற்பத்திகளை நிறுத்துமாறு தகவல் கொடுப்பினம். Isn't it cool? அதனால் முழுச்செயற்பாடும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடைபெறும்.
சுருக்கமாக, மாதவிடாய்ச் சுழற்சியில் GnRH முன்கபச் சுரப்பிக்குத் தகவல் சொல்ல, முன்கபச் சுரப்பி FSH ஜயும் LH ஜயும் உருவாக்கும். இவையிரண்டும் சூலகங்களுக்குத் தகவல் சொல்ல, சூலகங்கள் Estrogen ஜயும் Progesterone ஜயும் உருவாக்கும். இவையிரண்டும் கருப்பையின் அக உறையின் வளர்ச்சியையும் விருத்தியையும் கட்டுப் படுத்தும்.
சரி இப்ப மாதவிடாய்ச் சுழற்சியின் போது இந்த இயக்க நீர்களின் அளவுகள் எவ்வாறு கூடிக்குறைகின்றன எனவும் சூலகங்களில் என்ன நடக்குதென்றும் பார்ப்போம்.
கருப்பையின் அக உறை உதிரத் தொடங்கும் நாளை (The first day of periods), மாதவிடாய்ச் சுழற்சியின் தொடக்க நாளாக வைப்போம். படத்தில் காட்டப்பட்டவாறு தொடக்கத்தில் பெண்மை இயக்க நீரும் கருப்பை இயக்க நீரும் மிகக் குறைவான அளவுகளிலே காணப்படும். பின் பெண்மை இயக்க நீரின் அளவு படிப் படியாகக் கூடி கிட்டத்தட்ட 12 ஆவது நாள் உச்ச நிலையை அடைந்து, பின் தீடீரென்று கொஞ்சம் குறைந்து கடைசி 12 நாள்களும் ஓரளவு கூடிய அளவில் இருக்கும்.
கருப்பை இயக்க நீர் முட்டை சூலகத்திலிருந்து வேளியேரும் வரை மிகக் குறைந்தளவில் இருந்து, முட்டை வேளியேறிய பின் மிகக் கூடுதளான அளவில் corpus luteum ஆல் சுரக்கப்படும். FSH, LH இராண்டும் கூட குறைந்த அளவில் தொடங்கி முட்டை வெளியேற முன் உச்ச நிலையை அடையும் (இவற்றின் உச்ச நிலையே முட்டை வேளியேற்றத்தைத் தூண்டும்). பின் திரும்பவும் இவற்றின் அளவு குறைந்து விடும்.
சுருக்கமாக, பெண்மை இயக்க நீரினளவு தீடிரெனக் குறைதலே LH உச்சநிலையை அடையத் தூண்டும். LH இன் உச்ச நிலை சூலகத்திலிருந்துமுட்டை வேளியேற்றத்தைத் தூண்டும்.
மாதவிடாய்ச் சுழற்சியின் தொடக்கத்தில் விருத்தியடையாத முட்டைகளில் கிட்டத்தட்ட 20 முட்டைகள் FSH, LH ஆகிய இயக்க நீர்களின் தூண்டலால் கொஞ்சம் கொஞ்சமாக விருத்தியடையத் தொடங்கும். முட்டைகள் வளர வளர முட்டைகளைச் சுற்றியுள்ள செல்களும் (அவர்களுக்கு granulosa cells என்று பெயர்) பெருகத் தொடங்கும்.
FSH, LH இன் அளவுகள் கூடத் தொடங்க இந்த 20 முட்டைகளில் அநேகமாக ஒன்றின் வளர்ச்சி மிக அதிகளவில் இருக்கும். அதனால் அதையே விருத்தியடைய விட்டு மற்றைய முட்டைகள் விருத்தியடைவதை நிறுத்தி விடும். FSH, LH இன் அளவுகள் கூடிக் கொண்டு சென்று உச்ச நிலையை அடைய, கிட்டத்தட்ட 14 ஆம் நாளில் விருத்தியடைந்த முட்டைக் கூடு வீங்கி, வெடித்து முட்டை வெளியேறும்.
முட்டைக்கூட்டிலிருந்து முட்டை வெளியேறியதும் மிச்சமிருப்பது கருமுட்டைப் பை நீர்க்கட்டி (corpus luteum). இது முட்டை வெளியேறியது LH ஆல் தூண்டப்பட்டு, கருப்பையின் அக உறையை விருத்தியாக்கவும் கருப்பையை முட்டைக்கு ஏற்றவாறு வைத்திருக்கவும் கருப்பை இயக்க நீரை (progesterone) அடுத்த 14 நாட்களுக்குச் சுரக்கும்.
சூலகத்தை விட்டு வெளியேறிய முட்டை பலோப்பியன் குழாயினூடு பயணித்து கருப்பைக்கு வரும். இந்நிலையில் அம்முட்டை ஒரு விந்தையும் சந்தித்து கருக்கட்டல் இடம்பெறாவிட்டால் சாவதைத் தவிர வேறு வழியில்லை.
கருப்பையின் அக உறையில் நடக்கும் மாற்றங்கள்
கருக்கட்டல் நடந்தால் கரு, அடுத்த 40 கிழமைகளுக்கு இருக்கக் விருத்தியாகப் போகும் வீடு இதுவே. கருக்கட்டல் நடைபெறாவிடில் கருவுக்காக மெருகூட்டிய அனைத்தையும் உதிர்ப்பதே மாதவிடாயாக வெளியேறுகிறது. மாதாமாதம் இந்தத் திசுவில் நடக்கும் மாற்றங்களை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்.
திசு வளரும் கட்டம் (The Proliferative phase): முதல் நான்கு நாட்களில் கருப்பையின் அக உறையின் மேற்பாகம் உதிர்ந்ததும், அடுத்த கிட்டத்தட்ட 10/11 நாட்களுக்கு இந்தக் கட்டம் இருக்கும். படிப்படியாக அதிகரிக்கும் பெண்மை இயக்க நீரின் தூண்டலால், இந்தத் திசுவிலுள்ள செல்கள் எண்ணிக்கையில் பெருகி, உதலில் உதிர்ந்தளவு திசு திரும்பவும் புதிதாக உருவாக்கப்படும்.
இக்கட்டம் முடிவுறும் நிலையில் பெண்மை இயக்க நீரின் சுரப்பும் உச்ச நிலையை அடைந்து பின் திடீரென்று குறைவதால் LH, FSH இயக்க நீர்களின் சுரப்பு உச்சக் கட்டத்தை அடைய, திசு வளர்ந்து முடியும் கட்டத்தைல் சூலகத்தில் முட்டையும் வெளியேற்றப்படும்.
திசு விருத்தியடைந்து, சிறப்புப் பணிகளைப் பெற்று, கரு ஊன்றுவதற்குத் அவசியமான பலவற்றைச் சுரக்கும் கட்டம் (The Secretory phase): இக்கட்டத்தில் (கிட்டத்த்ட்ட இரண்டு வாரங்கள்) பெண்மை இயக்க நீருடன் கருப்பை இயக்க நீரும் சேர்ந்து, போன கட்டத்தில் வளர்ந்த திசுவை மெருகூட்டும் வேலைகள் நடக்கும்.
திசுவிலுள்ள பல வகைச் செல்கள் தேவையான வெவ்வேறு சிறப்புப் பணிகளை ஏற்க, சில சுரப்பிகள் முதிர்ந்து கரு இலகுவாக வந்து அக உறையில் ஊன்றுவதற்கான பல புரதங்களைச் சுரக்கும். இக்கட்டத்தின் இறுதியில் கருப்பையின் அக உறை கரு வந்து தங்குவதற்கான மாளிகை ஆக மாறி விடும்.
கருத்தரிக்காவிட்டால் உதிரும் மாதவிலக்குக் கட்டம் (The Menstrual Phase): இந்நிலையில் முட்டை வேளியேறியதும் விடுபட்ட கருமுட்டைப் பை நீர்க்கட்டி (corpus luteum, இதுவே கருப்பை இயக்க நீரைச் சுரந்து கொண்டிருக்கிறது)கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கிக் கொண்டிருக்கிறது.
கருப்பையை நோக்கிப் பயணித்திக் கொண்டிருக்கும் முட்டை கருக்கட்டப்பட்டால், கரு இன்னொரு இயக்க நீரான chorionic gonadotropin ஜச் சுரக்க, இவ்வியக்கநீர் corpus luteum க்கு "சாக வேண்டாம், நான் settle பண்ணும் வரையும் தொடர்ந்து எனக்கு கருப்பை இயக்க நீர் வேண்டும்" எனத் தகவல் கொடுப்பதால், corpus luteum தொடர்ந்து இன்னும் சில நாட்கள் வேலை செய்யும்.
அந்தத் தகவல் வராவிட்டால் Secretory phase இன் கடைசியில் corpus luteum முற்றாக அழிய, பெண்மை இயக்க நீரினதும், கருப்பை இயக்க நீரினதும் உற்பத்தி நிறுத்தப்படும். கட்டியெழுப்பட்டட்ட மாளிகையைப் பேணிப் பராமரிப்பதைத் தூண்டிய இயக்கநீர்காள் இல்லாமல் போக, அது கொஞ்சம் கொஞ்சமாக உதிர்வதே அடுத்த 3-5 நாட்கள் தொடரும் இரத்தப்போக்கு. அதன் பின் திசு வளரும் கட்டத்திலிருந்து திரும்பவும் தொடங்கும்.
சுருக்கமாக, முதலில் பெண்மை இயக்க நீர் அதிகரிக்க, கருப்பையின் அக உறை வளரும். பின் பெண்மை இயக்க நீர் சிறிது குறைவதால் LH, FSH இன் அளவுகள் உச்ச நிலையை அடைய, முட்டை வெளியேற்றப்படும். அதன் பின் LH விடுபட்ட முட்டைக் கூடு corpus luteum ஆக வள்ர்வதைத் தூண்டி, corpus luteum கருப்பை இயக்க நீரைச் சுரக்கும்.
பெண்மை உயக்க நீரும் கருப்பை இயக்க நீரும் சேர்ந்து கருப்பை அக உறையை கருவுக்கான மாளிகையாக மாற்றியமைக்கும். எல்லாம் முடிந்த பின் கருக்கட்டல் நடைபெறாவிடில், மாளிகையின் அத்திவாரத்தை மட்டும் விட்டு, மாளிகை இடித்தழிக்கப்படும். அழிக்கப்பட்ட கழிவுகளை வேளியேற்றுவதே மாதத்தில் 3-5 நாட்கள் தொடரும் இரத்தப்போக்கு. அதன் பின் அத்திவாரத்தில் இருந்து திரும்ப கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்படும்.
இந்த சுழற்சி சராசரியாக 28 நாட்கள் எனச் சொல்லப்பட்டாலும், in reality, பெரும்பாலான பெண்களுக்கு 21 -35 நாட்களாக இருக்கும். அதோடு பூப்பெய்திய பின் சில காலங்களுக்கும் menopause இன் அறிகுறிகள் வந்தபின் மாதவிடாய் நிரந்தரமாக நிற்குமுன்னும் மாதவிலக்கு வருவது ஒழுங்கற்றிருப்பது வழமையே.